×

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

வீஸிங் பிரச்னை உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் இன்ஹேலர் பயன்படுத்தலாமா? நரம்பில் ஊசி
போட்டுக் கொள்ளலாமா?
– ஆர்.எஸ்.ஷோபனா.

கர்ப்ப காலத்தில் வீஸிங் பிரச்னை இருக்கும் பெண்கள் இன்ஹேலர் பயன்படுத்தினால் எந்தப்பிரச்னையும் இல்லை. நுரையீரலில் வரும் பிரச்னைதான் வீஸிங் என்பதால் அதற்காகப் பயன்படுத்தும் இன்ஹேலர் மற்றும் மருந்துகள் நுரையீரலில் மட்டுமே செயல்படும். அவை எந்தவகையிலும் உடல் முழுக்கப் பரவிச் சிக்கல்களை ஏற்படுத்தாது. அதனால் குழந்தைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இன்ஹேலர் மற்றும் ஆக்ஸிஜன் சிகிச்சை போன்ற எவையும் பயன்தரவில்லை எனில் நரம்பு ஊசியைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால், இதற்குக் கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனை அவசியம். முடிந்த அளவுக்கு இன்ஹேலர் பயன்படுத்துவதே நல்லது.

என் மகளுக்கு 10 வயதாகிறது. இப்போதும் உணவை ஊட்டிவிட்டால் மட்டுமே சாப்பிடுகிறாள். இந்தப் பழக்கத்தை எப்படி நிறுத்துவது? அவளைத் தானாகச் சாப்பிட வைப்பது எப்படி?
– கே.மருதமுத்து, செங்கல்பட்டு.

பிறந்ததிலிருந்து கடைப்பிடித்துவரும் பழக்கங்களால்தான் இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. தின்பண்டங்களைத் தானாக எடுத்துச் சாப்பிடவில்லையென்றால், அவள் கைகளில் ஏதேனும் பிரச்னை உள்ளதா எனச் சோதியுங்கள். ஒருவேளை நரம்பு, தசை, எலும்பு போன்றவற்றில் பாதிப்புகள் இருந்தால் குடும்ப மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் சாப்பிட மறுப்பதற்கு விளையாட்டுத்தனமே காரணம். பிடிக்காத உணவை வற்புறுத்திக் கொடுப்பதால் அவள் அந்த உணவைத் தவிர்ப்பாள்.

எனவே, முதலில் அவளுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்து அவளையே சாப்பிடப் பழக்க வேண்டும். உணவின் நன்மைகளை அவளுக்குப் புரியும்படி எடுத்துச்சொல்லலாம். மேலும், அவள் வயதில் உள்ள சிறுமிகளோடு அமர்ந்து சாப்பிடச் சொல்ல வேண்டும். நண்பர்கள் சாப்பிடுவதைப் பார்த்து அவளும் தானாகவே சாப்பிடத் தொடங்கி விடுவான்.

குழந்தைகள் விளையாடுவதற்கு மொபைல் போன் கொடுப்பதால் தூங்கும்போதும் டச் போனில் விளையாடுவதுபோல் கைகளை அசைத்தபடி இருக்கின்றனர். கைப்பேசி பயன்படுத்துவதைத் தடை செய்தால் அழத் தொடங்குகின்றனர். அதற்கு என்னதான் செய்வது?
– தி.சூடாமணி, நீடாமங்கலம்.

அதிக நேரம் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே அதன் நிகழ்வுகள் தூக்கத்தில் வெளிப்படத்தான் செய்யும். இன்றைக்குக் குழந்தைகளுக்கு அந்த நிலை அதிகம் ஏற்படுகிறது என்றால் அதற்கான முக்கியக் காரணம் பெற்றோரே. பொழுதுபோக்கிற்காகவும் தன்னுடைய அந்தஸ்தை வெளிப்படுத்துவதற்காகவும் கைப்பேசிகளை வாங்கிக் கொடுத்துக் குழந்தைகளின் ஆரோக்கியம் கெடச்செய்கிறார்கள்.

இது அவர்களின் இயல்பான மனநிலையைப் பாதிக்கிறது. முன்பெல்லாம் வீடுகளில் தாத்தா, பாட்டி இருப்பார்கள். அவர்கள் சொல்லும் கதைகள்தான் பொழுதுபோக்கு. ஆனால், இன்று எந்த வீடுகளிலும் முதியவர்கள் இல்லாததால், அவர்களின் இடத்தைத் தொழில்நுட்பங்கள் ஆக்கிரமித்துவிட்டன.

மொபைல் போன் மட்டுமல்ல, கார்ட்டூன்களையும்கூட அதிக நேரம் பார்த்தால் அந்த நிகழ்வுகள் தூக்கத்தில் கனவாக வருவது இயல்பே. உடற்பயிற்சி மேற்கொள்வதுதான் இதற்குச் சரியான தீர்வு. முன்பு நொண்டி, கபடி, பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை இந்த மாதிரியான மனஉளைச்சல் ஏற்படாமல் இருக்கத்தான் விளையாடினார்கள். ஆனால், இன்று மனஉளைச்சல் ஏற்படுத்துவதைத்தான் விளையாடக் கொடுக்கிறோம். அதுமட்டுமல்ல, அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு வராமல், வீட்டுக்கு வந்தும் அதை கைப்பேசிகளின் வழியாகக் கவனித்துக் கொண்டிருப்பதால், அதைப் பார்க்கும் குழந்தைகளும் கைப்பேசியை உற்றுநோக்கப் பழகுகின்றனர். அதன் விளைவு அவர்களது தூக்கத்தில் தெரிகிறது.

லேப்டாப்பில் நீங்கள் எந்நேரமும் தீவிரமாக இருக்கும்போது குழந்தைகள் வந்து `அம்மா, அப்பா’ என அழைத்தால் நீங்கள் கோபம் கொள்வதுபோலத்தான் அவர்களிடமிருந்து நீங்கள் கைப்பேசியைப் பிடுங்கும்போதும் அவர்கள் கோபம் கொண்டு அழுகிறார்கள். எனவே, குழந்தைகளை இந்த நிலையிலிருந்து மாற்ற அவர்களை நீச்சல், சிலம்பம் போன்ற உடலுழைப்பு சார்ந்த பயிற்சி வகுப்புகளில் சேர்க்கலாம். சமூக நிகழ்வுகளில் ஈடுபடச் செய்யலாம். மருத்துவரீதியாக இதற்குப் பெரியளவில் தீர்வுகள் கிடையாது. ஒருசில குழந்தைகள் இம்மாதிரியான செயல்களில் தீவிரமாக இருந்தால் அருகிலுள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம். அவர்கள் தரும் கவுன்சலிங் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

The post கவுன்சலிங் ரூம் appeared first on Dinakaran.

Tags : Kunkum ,Prof. ,Muthiah ,Dinakaran ,
× RELATED கவுன்சலிங் ரூம்